விழுப்புரம்
 
விழுப்புரத்தில், இரும்பு கம்பியால் தாய் மற்றும் மகளை தாக்கிவிட்டு, ஒன்பது வயது மகனை அடித்தே கொலை செய்த இளைஞர் மற்றும் அவரது காதலியை காவலாளர்கள் தீவிர விசாரணைக்கு பிறகு கண்டுபிடித்து கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது வெள்ளம்புத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி ஆராயி (46). இவர்களுக்கு பாண்டியன் (25), சரத்குமார் (22), விஜயகுமார் (19), சமயன் (9) ஆகிய நான்கு மகன்களும், அஞ்சலாட்சி (17), தனம் (13) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை இறந்துவிட்டார். இவரது மூத்த மகன்களான பாண்டியன், சரத்குமார், விஜயகுமார் ஆகிய மூவரும் பெங்களூருவிலும், மகள் அஞ்சலாட்சி, திருப்பூரிலும் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இதனால் ஆராயி தனது இளைய மகள் தனம், இளைய மகன் சமயன் ஆகியோருடன் ஊரில் வசித்து வந்தார். தனம் ஊரில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பும், சமயன் 4-ஆம் வகுப்பும் படித்து வந்தனர்

போன மாதம் 21-ஆம் தேதி இரவு ஆராயி தனது மகள் தனம், மகன் சமயன் ஆகியோருடன் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் மூவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இதில் சமயன் படுத்த படுக்கையிலேயே இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். சமயனின் தாயும், அக்காளும் பலத்த காயங்களுடன் சுய நினைவின்றி கிடந்தனர்.

இந்த கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவலறிந்த அரகண்டநல்லூர் காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் சுய நினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆராயி, தனம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்க்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நள்ளிரவில் மர்ம நபர் யாரோ, ஆராயின் வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என்பது காவலாளர்களின் விசாராணையில் தெரியவந்தது. 

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், 

மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வீமராஜ் ஆகியோர் தலைமையில் ஆய்வாளர்கள் ஜெயவேல், கார்த்திகேயன், உதவி ஆய்வாளர்கள் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அகிலன், ஆனந்தராசு, நந்தகோபால், திருமால், ராஜாங்கம் மற்றும் காவலாளர்கள் அடங்கிய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இந்த தனிப்படை காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தினர். ஆராயிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததால் அதன் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறேதும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்தும் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் இதேபோன்ற பாணியில் நடந்த சம்பவங்களில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மேல்புவனகிரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வீரன் மகன் தில்லைநாதன் (37) என்பவர் மீது காவலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏனெனில், அவர் வீடு புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடிப்பதையே வழக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தவர் என்பது தெரியவந்ததால், அவரை பிடிக்க தனிப்படையினர் புவனகிரிக்கு விரைந்தனர். அங்கு அவரை தனிப்படையினர் பிடித்தனர்.

பின்னர், அவரை அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அவர், ஆராயி, தனம், சமயன் ஆகிய மூவரையும் இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு ஆராயி வைத்திருந்த ரூ.9000, செல்போன் ஆகியவற்றை பறித்ததோடு, சிறுமி தனத்தை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது சிறுமி கூச்சலிட்டதால் பலாத்கார முயற்சியை கைவிட்டு அவரை மீண்டும் இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து தில்லைநாதனை காவலாளர்கள் கைது செய்து அவரிடமிருந்த 6 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசுகள், 9 செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்திய 2 இரும்புக்கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடித்த நகைகளை விற்பதற்கு உடந்தையாக இருந்த அவரது காதலியான மேல்புவனகிரியைச் சேர்ந்த அம்பிகாவையும் (29) காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர் தில்லைநாதனையும், அம்பிகாவையும் காவலாளர்கள், திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.