அண்மையில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய நிலையில், வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான ஃபெஞ்சல் புயல் புதுவை அருகே கடந்த 30ம் தேதி கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. புயல் பாதித்த பகுதிகளில் தற்போது வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 12ம் தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை அடையக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் வருகின்ற 12ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. வருகின்ற 11, 12ம் தேதிகளில் கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி என கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
