தேனி

கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த லாரி, தேனியில் கட்டுப்பாட்டை  இழந்ததால் 300 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த ஓட்டுநர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், ஆழப்புலாவிலிருந்து பலாப் பழங்களை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தானை நோக்கி சனிக்கிழமை லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர்  மாவட்டம் உஞ்சேரா என்ற ஊரைச் சேர்ந்த சுபாட் மகன் அலிம் (24) என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் லுஸ்தம் (25) என்பவரும் உடன் வந்துள்ளார். நேற்று காலை தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலை வழியாக தமிழகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த இந்த லாரி இரச்சல் பாலம் அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்தது. 

நிலை தடுமாறிய லாரி ஓட்டுநர், இடது பக்கம் இருந்த 300 அடி பள்ளத்தில் லாரியை செலுத்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து மண்ணில் புதைந்தது. இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள், உடனடியாக  லோயர் கேம்ப்பில் உள்ள குமுளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர், காவலாளார்களும், மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தை நோக்கி பாய்ந்தபோது, அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட அலிம் மலை இடுக்கில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அலிம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லாரியோடு மண்ணில் புதைந்த லுஸ்தமை, இரவு 7 மணி வரை மீட்க முடியவில்லை. அதன்பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் அவரை சடலமாக மீட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் வடிவேல், விபத்தில் உயிரிழந்த இருவரும் தன்னிடம் ஓட்டுநர்களாகப் பணிபுரிந்தனர் என்றும், திருமணமாகாதவர்கள் என்றும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.