ஒரு பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவு.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
பிஸ்கெட் பாக்கெட்டில் 16 பிஸ்கெட் உள்ளதாக குறிப்பிட்டு விட்டு பாக்கெட்டில் 15 பிஸ்கெட் மட்டுமே இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஐ.டி.சி., நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஸ்கெட் பாக்கெட்டில் மோசடி
சென்னை மணலியை சேர்ந்த டில்லிபாபு என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரு நாய்களுக்காக அந்த பகுதியில் உள்ள கடையில் 'சன் பீஸ்ட் மேரி லைட்' பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து நாய்களுக்கு கொடுக்க பிஸ்கெட் பாக்கெட்டை திறந்த போது உள்ளே 15 பிஸ்கெட் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் பாக்கெட்டில் 16 பிஸ்கெட் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதுகுறித்து அவர் கடைக்காரரிடமும் கேட்டபோது, தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என கூறிவிட்டார். தொடர்ந்து ஐ.டி.சி., நிறுவனத்திடமும் முறையிட்ட போது சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டில்லி பாபு திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,
பிஸ்கெட் பாக்கெட் ஒரு பிஸ்கெட் குறைவு
ஐடிசி நிறுவனம் சுமார் 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்வதாகவும், ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா என்று கணக்கிடும் பொழுது, பாக்கெட்களில் ஒரு பிஸ்கெட்டை குறைத்து 15 பிஸ்கட்களை ஒரு பாக்கெட்டில் வைத்து பொதுமக்களிடம் நாள் ஒன்றுக்கு இந்த நிறுவனம் ரூ. 29 லட்சம் மோசடி செய்கிறது என்று கூறியிருந்தார். இதற்கு ஐடிசி நிறுவனம் பதில் கூறுகையில், பிஸ்கெட் எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்யவில்லை, ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் எடை 76 கிராம் என்ற அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டில்லி பாபு வாங்கிய பாக்கெட்டின் எடையை பரிசோதித்த போது 74 கிராம் எடைஇருந்துள்ளது.
ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
இதனையடுத்து நுகர்வோர் நீதிமன்றம்,பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. எடையின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறும் காரணத்தையும் ஏற்க முடியாது. பிஸ்கட் பாக்கெட் கவரில் 16 பிஸ்கட்டுகள் உள்ளே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் எடையை பற்றி கூறவில்லை என தெரிவித்தது. இதனையடுத்து நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்ததற்காக ஐ.டி.சி., நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் வழக்கு தொடர்ந்த டெல்லி பாபுவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.