A fake case for those who fought against a bridal shop The petition demanding the release of arrested persons ...
காஞ்சிபுரம்
பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட சாராயக் கடைக்கு எதிராக போராடியவர்கள் 30 பேரை விடுவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த புகார் மனுவில், “விரால்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக்கோரி, கடந்த 14-ஆம் தேதி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பி.அன்பரசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வா.பிரமிளா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின் பலனாக வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு டாஸ்மாக் சாராயக் கடையை மூடினர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பி.அன்பரசு மீது காவலாளர்கள் பொய் வழக்குப்போட்டு, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இதர அமைப்புகளைச் சேர்ந்த ம.பா.நந்தன், வா.பிரமிளா உள்பட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக போராடியவர்ள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
