சேலம்

சேலத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய மருத்தவருக்கு, பெண்ணின் உறவினர்கள் மற்றும் மக்கள் சேர்ந்து தருமஅடி கொடுத்தனர். பின்னர் அவர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள வனவாசி பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் சீனிவாசன் (48). எம்.பி.பி.எஸ். படித்த இவர் சர்க்கரை நோய் சிகிச்சைக்கான பட்டயப் படிப்பும் முடித்துள்ளார்.

இவர், தாரமங்கலத்தில் உள்ள சங்ககிரி பிரதான சாலையில் பழைய சந்தைபேட்டை அருகே சொந்தமாக மருத்துவமனைக் கட்டியுள்ளார். இங்கு கடந்த 15 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்த நிலையில் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் காய்ச்சலுக்காக நேற்று முன்தினம் இரவு மருத்துவர் சீனிவாசனின் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அப்போது சிகிச்சை அளிப்பதாக கூறி அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர் சீனிவாசனுக்கு தருமஅடி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் குமரன், உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவர் சீனிவாசனை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.

இதனிடையே அந்த இளம்பெண் தனக்கு மருத்துவர் சீனிவாசன் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக மருத்துவர் சீனிவாசனை காவலாளர்கள் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர் நேற்று ஓமலூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.