சென்னை, நந்தனம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆட்டோ மற்றும் 3 கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

சென்னை, அண்ணாசாலை, நந்தனம் அருகே கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த கார் சைதாப்பேட்டையை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, மற்ற வாகனங்கள் மீது மோதியது. இதனால் 

மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ந்து போயினர். கார் வேகமாக வருவதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக செலுத்தினார்.

ஆனாலும், தாறுமாறாக வந்த கார், முதலில் ஆட்டோ மீது மோதியது. பின்னர், அருகில் உள்ள 3 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனாலும், யாருக்கும் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர். வேகமாக வந்த கார் ஓட்டுநர், தப்பியோடி விட்டார். 

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே, மெட்ரோ ரயில் பணிகளால் திக்குமுக்காடி வரும் நிலையில், விபத்து காரணமாக மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துக்கு காரணமாக கார் மற்றும் தப்பியோடிய ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.