பிக்பாஸ் என்ற உடனே உங்கள் சிந்தையெல்லாம் நிகழ்ச்சி பற்றி தான்  தோன்றும். ஆனால் உருவத்திலும் சரி, மன உறுதியிலும் சரி இவர் உண்மையில் ஒரு பிக்பாஸ் தான்.

யார் இவர் ?

திருநெல்வேலியில் பிறந்து,பள்ளி கல்லூரி வாழ்கையை முடித்து, லட்சியத்தோடு சென்னைக்கு பறந்து வந்து, விடாமுயற்சியுடன்  போராடி தேசிய அளவில் நடைப்பெற்ற ஸ்ரென்த் லிப்டிங் போட்டியில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தங்கத்தமிழன்தான் “வால்டர்  அருண் குமார் “

Body building ,power lifting,strength lifting 

34 வயதான வால்டர் அருண்குமார் ஸ்ரென்த் லிப்டிங் மட்டுமல்லாமல் பவர் லிப்டிங், பாடிபில்டிங் என அனைத்திலும் கலக்குகிறார்.தனக்கென எந்த ஒரு பயிற்சியாளரையும் கூட வைத்துக்கொள்ளாமல், இன்டர்நெட் மூலம் தேடி தேடி தனக்கு தேவையான பயிற்சியை படிப்படியாக கற்று தேர்ந்துள்ளார்.

38 கோல்ட் மெடல் !

மாவட்ட மற்றும் மாநில அளவில் இதுவரை 38 கோல்ட் மெடலை தட்டி சென்றுள்ள வால்டர் அருண் குமார், சமீபத்தில் அஸ்ஸாமில்  நடைப்பெற்ற “STRENGTH LIFTING”  போட்டியில் முதல் முறையாக தேசிய அளவில் முதலிடத்தை பிடித்து, சர்வேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துக்கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

பயிற்சி நேரம்

காலை 6 மணி முதல் 12.30  மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10.30  மணி வரையிலும் சென்னை போரூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தான் இவருடைய இலட்சிய வாழ்க்கையே செல்கிறது.

வால்டர் அருண் குமாரின் கனவு என்ன தெரியுமா ?

சர்வேச அளவில் நடைபெறும் போட்டிகளிலும், காமன் வெல்த்  போட்டியிலும் கலந்துக்கொண்டு,முதலிடத்தை பிடித்து இந்தியாவிற்கு  பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான். அத்துடன் சொந்தமாக ஒரு  உடற்பயிற்சி கூடத்தை நடத்த வேண்டுமென, சிறு வயது முதல் தற்போது  வரை தான் கண்ட கனவை,விரைவில் நனவாக்குவேன் என உறுதிப்பட கூறுகிறார் வால்டர்.

இதே போன்று, வேலூரை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம்  வசதி வாய்ப்பு இல்லாமல், விடாமுயற்சியுடன் பல்வேறு  சவால்களை சந்தித்து, இறுதியில் காமன் வெல்த் போட்டியில் முதலிடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

வால்டருக்கு திறமை இருப்பதை உணர்ந்த அரசு, அவரின் திறமையை மண்ணிற்குள் குழித்தோண்டி புதைக்காமல், ஊக்குவிக்கும் வகையில் சில  சலுகைகளை வழங்கினால், தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தவர், சர்வதேச அளவில் முதலிடத்தை பிடிக்க மாட்டாரா என்ன? என மக்கள்  எழுப்பும் கேள்விக்கு விடை கிடைத்தால், வால்டரின் கனவும் நனவாகும், இந்தியாவிற்கும் பெருமை சேரும் என்பதை யாராலும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

நேற்று சதீஷ் சிவலிங்கம்... இன்று வால்டர் அருண் குமார்!!