90 sovereigns of gold jewelery to break the lock of the house

சென்னை மாதவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 90 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வந்த தமிழகத்தில் தற்போது நித்தம் நித்தம் கொலைகளும் கொள்ளைகளும் அரங்கேறி வருகின்றன. அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் செயின் பறிப்பு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகள் திருட்டு, போன்றவை அன்றாடச் செய்திகளாகி விட்டன. இதனை தடுக்க முடியாமல் தமிழக காவல்துறை தட்டுத் தடுமாறி வருகிறது.

நெல்லையில் 300 சவரன் நகை கொள்ளை

நெல்லையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று முன்தினம் 300 சவரன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் மேற்கூரையை உடைத்து கீழே இறங்கிய கொள்ளையர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த 37 கிலோ தங்கநகைகளை அள்ளிச் சென்றனர். தீவிர புலன்விசாரணைக்குப் பிறகு கொள்ளையில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிசிடிவி கண்காணிப்பை துண்டிப்பது, வலுவான மேற்கூரையை உடைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் இவருக்கு அளிக்கப்பட்டது தெரியவந்தது.

கொள்ளைக் களமாகும் மாதவரம்

சென்னை மாதவரத்தில் சாந்தி என்பவரது குழந்தையின் கழுத்தில், கத்தி வைத்து 45 சவரன் தங்கநகைகளை மர்ம நபர்கள் நேற்று திருடிச் சென்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வரும் நிலையில், மாதவரத்தில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவம் அரங்கேறி உள்ளது. கே.கே.நகரில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். தனது குடும்பத்தினருடன் இவர் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இன்று அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 90 சவரன் தங்க நகைகள், 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். 

தகவலறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து கொள்ளையர்கள் விட்டுச் சென்ற அடையாளங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இவ்விரு கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.