90 percent buses operating in the city Due to the holidays the buses that hit the tall without a passenger ...
விழுப்புரம்
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து விழுப்புரத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால், விடுமுறை நாள் என்பதால் பயணிகள் மிகக் குறைந்த அளவே பயணித்தனர்.
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ஆம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்பட 14 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இருப்பினும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று 4–வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒரு சில பணிமனைகளில் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்குகின்றன.
மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து சென்றன. அரசு பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அதிகளவில் இயக்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, செஞ்சி உள்பட மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்து 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
நேற்று விடுமுறை நாள் என்பதாலும், தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பேருந்துகளில் குறைந்த அளவிலான பயணிகள் சென்று வந்தனர்.
