85.03 percent pass in Ariyalur district in plus 2 exams This year is less than last year ...

அரியலூர் 

பிளஸ் 2 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 85.03 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைவாகும். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. 

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 72 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே பயின்று வருகின்றனர். 

கடந்த 2015-ல் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 80.92 சதவீதம், 32-வது இடம் என்றிருந்த நிலையில், அப்போதைய சார் ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி வழிகாட்டுதலின் படி, தேர்ச்சி குறைவான பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 

இதன் விளைவாக 2016-ல் பிளஸ்-2 தேர்வு தேர்ச்சி சதவீதம் ஒரே ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து 93.53 ஆக உயர்ந்து, அரியலூர் மாவட்டம் 20-ஆம் இடத்திற்கு முன்னேறியது. 2017-ல் 88.48, 2018 ஆம் ஆண்டில் 85.03 என்று தேர்ச்சி சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.

"அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதே முக்கிய காரணம். முன்னர் அமைக்கப்படிருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுக்களும் செயல்படுவதில்லை.

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பயந்து, கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கல்வித் தரம் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதே கிடையாது. நலத்திட்ட விழா நடத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டி, அதிகாரிகள் பதவி உயர்வு பெறுகின்றனர்" என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 10 மணிக்கு வெளியானது. 

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 72 பள்ளிகளைச் சேர்ந்த 8,318 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களில் 7,102 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 85.03 சதவீதத் தேர்ச்சி. கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்து, தேர்ச்சி சதவீத அடிப்படையில் 31 இடத்தில் உள்ளது.

க. அம்பாபூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப் பள்ளி என 2 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்று அரசு உதவிப் பெறும் பள்ளிகள், 8 மெட்ரிக். பள்ளிகள், 4 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.