இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வை நடத்தி, அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில், மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் வகையில் ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மீதமிருக்கும் 15 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அரசாணையை  எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 14ஆம் தேதி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சென்னை, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், நீதிபதி ரவிச்சந்திர பாபு வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்தும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. மேலும், அரசாணை ரத்து செய்யப்பட்டது சரியே என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இட ஒதுக்கீடு என்பது சமமற்ற நிலையை உருவாக்கும் என்றும், தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காத வகையில், கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழக அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சேர்க்கையை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.