80 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையனை, நள்ளிரவில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏராளமான தங்கம், வைர நகைகள், கட்டுக்கட்டாக பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கே.வி குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நாமக்கல், தருமபுரி உள்பட பல  காவல் நிலையங்களில் 80க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளார்.

கடந்த மாதம், திருட்டு வழக்கில் மணிகண்டனை கைது செய்த, காஞ்சிபுரம் போலீசார், அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த 3ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர், 6 இடங்களில் 2 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் போலீசாருக்கு அல்வா கொடுத்த மணிகண்டன், நேற்று முன் தினம் திண்டுக்கலில் ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கோவை வழியாக காரில் கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சேலம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  அந்த நேரத்தில் சேலம் சிப்காட் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில், காருக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருநத் மணிகண்டனை சுற்ற வளைத்து கைது செய்தனர்.

அவரது காரில் சோதனையிட்டபோது, பூட்டுகளை உடைக்க பயன்படுத்திய இரும்பு ராடுகள், 8 செல்போன்கள், வைர நகைகள், தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள், கட்டு கட்டாக பணம் ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவனை கோவை குற்றப்பிரிவு  போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மணிகண்டனிடம் விசாரணை நடந்து வருகிறது.