திருநெல்வேலி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மத்திய – மாநில அரசுகள் அதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய – மாநில அரசுகள் சட்டம் இயற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் பழனி இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்தப் போராட்டத்தில், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்றும் “அதற்கான சட்டம் இயற்றிட மத்திய – மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டது.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பழனி, செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், கணபதி, ஸ்ரீராம், கற்பகம், மோகன், சி.ஐ.டி.யு. தலைவர் ராஜாங்கம் உள்ளிட்ட 80 பேரை அதிரடியாக கைது செய்தது. அவர்கள் அனைவரையும் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதனையொட்டி நெல்லை சந்திப்பில் மாநகர உதவி காவல் ஆணையர் மாரிமுத்து நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் உதயசூரியன், உதவி ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது.