Asianet News TamilAsianet News Tamil

உடுமலையில் சங்கர் படுகொலை.. 8 பேர் குற்றவாளிகள்..! ஆணவ கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

8 are guilty in udumalai sankar murder case said court
8 are guilty in udumalai sankar murder case said court
Author
First Published Dec 12, 2017, 12:43 PM IST


தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை  உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரியும் பழனியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். 

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் கொலை செய்த மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவந்தது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 11 பேரின் மீதும் 1500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. இதில், மிகவும் முக்கியமானது கௌசல்யாவின் வாதம். சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டது எனது குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. எங்களை பிரிக்க முயற்சி செய்தனர். முடியாததால் எங்களை ஏற்கனவே இரண்டுமுறை கொலை செய்ய முயற்சித்தனர். கடைசியாக மார்ச் 13-ம் தேதி சங்கரை வெட்டி கொலை செய்துவிட்டனர் என விரிவான வாதத்தை கௌசல்யா பதிவு செய்தார்.

கௌசல்யாவின் வாதம் இந்த வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய சங்கர் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தீர்ப்பை தமிழகமே எதிர்நோக்கி காத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு, சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, மணிகண்டன், ஜெகதீசன், மதன், செல்வகுமார் உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.  தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்ளிட்ட மூவர் பற்றி நீதிபதி எதுவும் தெரிவிக்கவில்லை.

உணர்ச்சி வேகத்தில் அவசரப்பட்டு செய்துவிட்டதால், குறைந்த பட்ச தண்டனை விதிக்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பிலும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios