763 fishermen returning home land from maharashtra

ஓக்ஹி புயல் பாதிப்பால் மஹாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய 763 தமிழக மீனவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். 
ஓக்ஹி புயலால் பாதிக்கப்பட்டு, கடலில் அலைக்கழிக்கப் பட்டு, மகாராஷ்டிரப் பகுதிகளில் ஒதுங்கிய மீனவர்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தது மாநில அரசு. இந்நிலையில், தேவ்கட்டிலிருந்து 539 மீனவர்களும் ரத்னகிரியிலிருந்து 224 மீனவர்களும், தமிழக அரசு வழங்கிய டீசல், உணவு, நிதியை ஆகியவற்றைப் பெற்று, தமிழகத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஓக்ஹி புயல் காரணமாக 60க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற 537 மீனவர்களை இதுவரை காணவில்லை . ஒகி புயலால் 3,933 ஹெக்டேரில் பல வகையான பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. புயல் காரணமாக 5,032 வீடுகள், 12,500 மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. 

குமரியில் மீனவர்களின் வீடுகளுக்கு சென்று கடலுக்குச் சென்றவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது . குஜராத்தில் உள்ள தமிழக மீனவர்களுக்கு 1000 லிட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 14 கட்டடங்களில் பழுது நீக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 192 கி.மீ தொலைவுக்கு 259 ஊராட்சி ஒன்றிய சாலைகள் சேதமடைந்துள்ளன. உடனடி போக்குவரத்துக்காக 8.34 கி.மீ தொலைவுள்ள 13 சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். 

இதனிடையே, தமிழக அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்ட சேத நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், 

ஓக்ஹி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த அறிக்கையை டிச.12க்குள் சமர்பிக்கும் வகையில் முழுவீச்சில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இம்மாவட்டத்தில் இதுவரை 740 ஹெக்டர் பரப்பளவிலான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பயிர் சேதங்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி 90 அலுவலர் குழுக்கள் மூலம் நடக்கிறது.

ஓக்ஹி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 287 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 53 ஹெக்டர் பரப்பளவில் தென்னை மரங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. 3,623 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.