தமிழகம் முழுவதும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 650 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி, ரூ.75 கோடியில் கடந்த 10 மாதத்துக்கு முன் தொடங்கப்பட்டது. தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட இந்த கட்டிட பணிகளை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள அதிகாரிகளிடம், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தரை மற்றும் 3 தளம் கொண்ட மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு 460 படுக்கைகள் அமைக்கப்பட்டு, பல்நோக்கு மருத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பருவ மழை தொடங்குவதற்கு முன், சுகாதார துறை அதிகாரிகள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர். டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் குறித்து, சுகாதார துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை 650 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை 36வது போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி டாக்டர்களை கண்காணிக்க, சுகாதார துறையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து போலி டாக்டர்களையும் கைது செய்து சிறையில் அடைப்போம்.
