இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்வளத்தை 64 வெளிநாட்டுக் கப்பல்கள் திருடிக் கொண்டிருப்பதாக தேசிய மீனவர் பேரவையின் தலைவர் மா.இளங்கோ தெரிவித்தார்.

இராமநாதபுரம் வலம்புரி மகாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீனவ மகளிர் மாநில மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் மா.இளங்கோ.

அப்போது பேசிய அவர், “ஆழ்கடல் மீன்பிடிப்பு உரிமங்கள் இந்திய மீனவர்களுக்கே வழங்கப்படமால 64 வெளிநாட்டுக் கப்பல்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இதனால், இந்தியாவின் மீன்வளத்தை அந்த 64 வெளிநாட்டுக் கப்பல்கள் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இவை ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கோடி அளவில் மீன்வளத்தை கொள்ளையடிக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்கரைகளில் அணுமின் நிலையங்கள், உல்லாச விடுதிகள் மற்றும் தொழிற்பேட்டைகள் அமைக்க பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இதைத் தடுக்க வரும் 21 ஆம் தேதி உலக மீன்வள தினத்தன்று கடல் அரிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

தேசிய மீனவர் பேரவை சார்பில் இம்மாதம் 21 ஆம் தேதி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள பங்கேற்கும் வகையில் பேரணி புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் 11 மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொள்வார்கள்.

தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கை அரசால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை என்பது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண தீவிர முயற்சி மேற்கொண்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் இலங்கை வடக்கு மாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் இப்பிரசினைக்கு தீர்வு காண முடியாமல் தடையாக இருந்து வருகிறார்.

இருநாட்டு அதிகாரிகளின் கூட்டு செயல்பாட்டுக்கு குழு அமைக்கப்பட்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. இரு நாட்டு மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்ட கூட்டத்தால் கூட சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க முடியவில்லை. இந்நிலையில் சாதாரண அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழுவால் படகுகளை எப்படி விடுவிக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மகளிர் மாநாட்டிற்கு ராமநாதபுரம் மீன்பிடி தொழிலாளர் நலச்சங்க தலைவர் ஆ.பால்ச்சாமி, செயலாளர் ஜி.ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 13 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவ மகளிர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.