தமிழகத்தில், மீன்களின் இனப் பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இந்த நேரங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், அவர்களுக்கான நிவாரண நிதி அரசு சார்பில் வழங்கப்படும்.

அதிலும், அரசு பதிவு பெற்ற மீனவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே இந்த நிவாரண நிதி கிடைக்கும். அதில், பலருக்கு இதுவரை சரிவர கிடைக்கவில்லை என கூறி வருகின்றனர். குறிப்பாக நிவாரண உதவி, கிடைக்க வேண்டிய காலத்தில் வழங்காமல், முடிந்த பிறகு தருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு மீன் பிடி தடைக்காலம் 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த தடைக்காலங்களில், மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 70ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், தடைக்கால நிவாரண நிதியை விரைவில் வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் பிடி தடைக்காலம் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், 2000க்கு மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.