6 members of the same family are poisoned .. Feeling background ..!
மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி செய்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே வண்டியூர் குறிஞ்சி பகுதியில் வசித்துவந்தவர் ஜெயஜோதி. ஜெயஜோதி, அவரது மகன்கள் வேல்முருகன், குறிஞ்சி குமரன், இரண்டு மருமகள்கள், ஜெயதாரணி, ஜெய மோனிகா, ஜெயசக்தி மற்றும் பேரன் பிரவீண் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.
இவர்களில் பிரவீண் மட்டும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். மற்ற அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை முதல் அவர்களின் வீடு திறக்கப்படாததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அடுத்த தெருவில் இருந்த அவர்களின் உறவினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த உறவினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அனைவரும் விஷம் அருந்தி கிடந்தது தெரியவந்தது. விஷம் அருந்தியதில் ஜெயஜோதி, அவரது இரண்டு மகன்கள், மருமகள் தேவிபாலா, பேத்திகள் ஜெயதாரணி, ஜெயசக்தி ஆகியோர் வீட்டிலேயே உயிரிழந்தனர். ஜெயஜோதியின் ஒரு மருமகளான தங்கசெல்வியும் பேத்தி ஜெயமோனிகாவும் மட்டும் உயிருக்கு போராடியுள்ளனர். அவர்கள் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் ஜெயா நர்சரி என்ற பள்ளியை நடத்தி வருகின்றனர். பள்ளிக்காக பல லட்சங்கள் கடன் வாங்கி செலவு செய்துள்ளனர். தீபாவளி சிறப்பு சீட்டு, வட்டிக்கு பணம் தருவது என பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளனர். தீபாவளி நெருங்கிவிட்டதால் சீட்டுக்கு பணம் கொடுத்தவர்களுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் பணம் கொடுக்க வழியின்றி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இவர்கள் இறந்த செய்தி தெரிந்ததும் பணம் செலுத்தியவர்கள் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இறந்த குடும்பத்தினருக்கு பல கோடி மதிப்புள்ள கடைகள், பள்ளிக் கட்டிடங்கள் என பல்வேறு சொத்துக்கள் இருக்கிறது. பணம் செலுத்தியதற்கான உரிய ஆவணம் இருந்தால் பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
குடும்பத்தினர் இறந்தது தொடர்பாக விடுதியில் தங்கி படித்துவரும் பிரவீணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
