வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (47). குடியாத்தம் பகுதியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். கடையின் உரிமையாளர், மாதத்தில் ஒரு முறை சீனிவாசனிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்புவார். சென்னையில் இருந்து பல்வேறு டிசைன்களில் நகைகளை வாங்கி கொண்டு, சீனிவாசன் குடியாத்தம் செல்வது வழக்கம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நகை வாங்குவதற்காக சீனிவாசன் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அங்கு பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நகை பட்டறைகள் மற்றும் நகை கடைகளில் பல டிசைன்களில் சுமார் ஒன்றரை கிலோ நகைகளை வாங்கினார்.

அன்று இரவு சீனிவாசன், பழனி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் குடியாத்தம் புறப்பட்டார். அதிகாலை 4 மணியளவில் குடியாத்தத்தில் இறங்கிய அவர், நகை பையுடன், தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

குடியாத்தம் வாணி தெரு அருகே சென்றபோது, திடீரென காரில் வந்த 4 பேர், அவரை மறித்து, அவரிடம் இருந்த நகைப்பையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த மக்கள் ஓடிவந்தனர்.

அதற்குள் மர்மநபர்கள், சீனிவாசனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த நகைப்பையை பறித்து கொண்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.56 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில், சீனிவாசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாம்நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சீனிவாசன் நகைகளை கொண்டு வருவதை அறிந்த சிலர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம்என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சீனிவாசன் வேலை செய்யும் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

மேலும், தொழில் போட்டியால், அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளவர்கள், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகிறார்களா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.