5 per cent reduction in food prices in pockets - District Appointment Officer Action ...

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள உணவகங்களில், உணவுப் பொருள்களை பாத்திரங்களில் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் விலையை குறைக்க வேண்டும் என்று மாவட்ட நியமன அலுவலர் மா. செளமியா சுந்தரி அதிரடியாக அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே உணவகம், அடுமனையகம், தேநீர் விடுதி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைப்பெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட நியமன அலுவலர் மா.சௌமியா சுந்தரி தலைமை வகித்து பேசியதாவது:

"அனைத்துக் கடைகளின் உரிமையாளர்கள் பதிவு மற்றும் உரிமம் கட்டாயம் வாங்க வேண்டும். இவற்றை பெற ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 200 உணவு வணிகர்களுக்கு உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான செலுத்துச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

உணவகங்களை சுகாதாரமாக, தண்ணீர் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும். சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகள், செய்திதாள்களில் வைத்து பொட்டலம் கட்டக் கூடாது.

உணவுப் பொருள்களை கையாளும்போது தலையுறை, முக உரை, மேல் அங்கி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

அனைத்து உணவுக் கடைகளிலும், உணவுப் பொருள்களின் விலைப் பட்டியலை ஒட்ட வேண்டும்.

உணவுப் பொருள்களை பாத்திரங்களில் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் விலை குறைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைத்து, விலையை குறைத்து வழங்க வேண்டும்.

தேநீர் விடுதிகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தக் கூடாது.

உணவுப் பொருள்களில் கலப்படம் தொடர்பாக புகார் அளித்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும்" என்று அவர் பேசினார்.

இந்த முகாமில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ந. சின்னமுத்து, த. அழகுவேல், வெ. ரத்தினம், ந. ரவி, மா. லட்சுமணபெருமாள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.