கொடைக்கானலில் 5 மணி நேரம் விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகளும் சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். குளு,குளு கொடைக்கானலில் மழையில் நனைந்த படி சுற்றுலாப்பயணிகள் சீசனை அனுபவித்தனர்.

பொதுவாக மார்ச் மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது கடினம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரபிக் கடல் பகுதியில் கன்னியாகுமரி அருகே உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது.இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 13-ந்தேதி பலத்த மழை பெய்தது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலு குறைந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். பகல் 11 மணியளவில் திடீரென மேகங்கள் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழை விடாமல் 5 மணி நேரத்துக்கு  கொட்டித் தீர்த்தது. இது அங்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகளுக்கு சற்று  சிரமத்தைக் கொடுத்தாலும், மழையை அவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த மழை அங்குள்ள விவசாயிகளுக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதே போல் நீலகிரி மாவட்டம் உதகையில்  நேற்ற தொடர்ந்து 4 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது

இதனிடையே  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று கம மழை பெய்யது. இந்த மழை மா பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.