Asianet News TamilAsianet News Tamil

சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னால் எம்.எல்.ஏ-வுக்கு 4 ஆண்டுகள் சிறை; மனைவி, மகனுக்கும் அதே தண்டனை...

4 years jail for dmk former MLA and his wife and son for asset case
4 years jail for dmk former MLA and his wife and son for asset case
Author
First Published Jun 27, 2018, 12:31 PM IST


விழுப்புரம்
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 4 ஆண்டுகள சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரது மனைவி, மகனுக்கு அதே தண்டனை விதித்தது விழுப்புரம் நீதிமன்றம். 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா புளிச்சப்பள்ளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (67). தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 13.5.1996-ஆம் ஆண்டு முதல் 13.5.2001 வரை வானூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விழுப்புரம் இலஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள், மாரிமுத்து வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் 131 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இதுகுறித்து காவலாளர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில், மாரிமுத்து, வருமானத்திற்கு அதிகமாக ரூ.16 இலட்சத்து 88 ஆயிரத்து 951 அளவில் சொத்து சேர்த்து வைத்தது தெரியவந்தது. 

இந்த சொத்துக்கள் மாரிமுத்துவின் மனைவி துளசியம்மாள் (60), மகன் பிரகாஷ் (35) ஆகியோரது பெயரில் இருந்தது.

இதனையடுத்து மாரிமுத்து, துளசியம்மாள், பிரகாஷ் ஆகியோர் மீது கடந்த 31.3.2004 அன்று இலஞ்ச ஒழிப்புத்துறை காவலாளர்கள் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அதன்பின்னர் இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. 

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜகுமாரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 60 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி பிரியா தீர்ப்பு அளித்தார். 

அதில், குற்றம் சாட்டப்பட்ட மாரிமுத்து, துளசியம்மாள், பிரகாஷ் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பிரியா தீர்ப்பளித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios