நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்தவர் மகேந்திரன் (37) அவரது மனைவி ரேவதி (27) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சக்திவேல் (7) என்ற மகனும் அக்ஷிதா (3) என்ற மகளும் உள்ளனர்.  மகேந்திரன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு விடுமுறை கிடைக்கும் நேரத்தில் குழந்தைகளை பார்க்க மகேந்திரன் ஊருக்கு வந்து செல்வார்.

இந்நிலையில் மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மகேந்திரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டார். மஞ்சள் காமாலை நோய்க்கு இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெற பாபநாசத்தில் உள்ள கணவரை தன்னுடைய தாய் வீட்டிற்கு ரேவதி அழைத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

மகேந்திரனின் குழந்தைகள் வழக்கமாக காலையிலேயே வீட்டிற்கு வெளியே வந்து விளையாடுவார்கள். ஆனால் அவர்கள் விளையாடவில்லை. மேலும் அவர்களது வீடு காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரேவதியின் தயார் கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த பிச்சம்மாள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது மகேந்திரன், அவரது மனைவி ரேவதி, குழந்தைகள் கதிர்வேல், அஸ்மிதா ஆகிய 4 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் இருந்தனர். இது பற்றி போலீசாருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் 4 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.