மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் 3வது நாளாக அஞ்சலி செலுத்துகின்றனர். அங்கு வந்த பெண்கள் தங்களது 3அடி கூந்தலை மொட்டையடித்து, கண்ணீர் சிந்துகின்றனர். அவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவால் கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று 3வது நாளாக, அவரது நினைவிடத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

பெண்கள் உள்பட ஏராளமானோ, ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்துகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் வருவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை பார்த்து கண்ணீர் சிந்தி தங்களது அஞ்சலியை மக்கள் செய்து வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்காக, ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இலவசமாக கிச்சடி, பொங்கல், சாம்பார் சாதம் உள்பட பலவித உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. அதிமுக சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிமுக தொண்டர்கள் உள்பட அஞ்சலி செலுத்த வரும் அனைத்து பொதுமக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.