ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து குட்கா, கஞ்சா விற்போரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி கடந்த மாதம் 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே போதை பெருட்கள் விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பார்சல் மூலம் போதை பொருட்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் குட்கா, கஞ்சா கடத்தல், பதுக்கல் சங்கலியை ஒழிக்க ஆப்ரேசன் கஞ்சா 2.0 என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதமாக நடைபெற்ற கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கஞ்சா வியாரிகளிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்பனை செய்த 6,319 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 44.9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா மொத்த வியாபரிகளின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 3 குட்கா வியாபாரிகளின் 10 வங்கிக் கணக்குகள், 6 நிலம் வீட்டுமனை, வாகனம் முடக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 7 கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கிக் கணக்குகள், 4 நிலம், வாகனம் கைப்பற்றப்பட்டன. தேனி மாவட்டத்தில் 6 கஞ்சா கடத்தல்காரர்களின் 8 வங்கிக் கணக்குகள், வீட்டுமனை, வாகனம் முடக்கப்பட்டன. கஞ்சா வேட்டையின் போது போதைப்பொருள் நுணு்ணறிவுப் பிரிவுனரால் 963 கிலோ கஞ்சாவும், ரயில்வே காவல் படையால் 734 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
