கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி உபரி நீர்  திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினி அணை நீர் இன்று இரவுக்குள் தமிக எல்லையான பிலிகுண்டுவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவின் குடகுமலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், கபினியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 35,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து நீர் திறப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கபினி அணையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழக எல்லையை சென்றடையும் என்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,912 கனஅடியில் இருந்து தற்போது 3,278 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 56.19 அடியாகவும், நீர் இருப்பு 22 புள்ளி 43 டிஎம்சியாகவும் உள்ளது.

குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் மட்டுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயிகள் தொடர்ந்து கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் அதற்கு கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை இப்போது போல் பெய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.