ஈரோடு

ஈரோட்டில் நிரூபர், பாஜக பிரமுகர் என்று பொய் சொல்லி அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி 13 பேரிடம் ரூ.35 இலட்சம் மோசடி செய்த இருவரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த விஜயராகவன் என்பவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமாரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். 

அந்த மனுவில், "பவானி அருகே உள்ள ஒரிச்சேரியை சேர்ந்த கண்ணன் (32), கோபி அருள்நகரை சேர்ந்த மனோஜ்குமார் (48) ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து ஏமாற்றி வருகின்றனர். 

பலரிடம் இலட்சக் கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார். 

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்களிடம் அந்த மனுவைக் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவின்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் நடத்திய விசாரணையில், கண்ணனும், மனோஜ்குமாரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 13 பேரிடம் ரூ.34 இலட்சத்து 84 ஆயிரம் வசூலித்ததும், அவர்களிடம் போலியான அரசு வேலை உத்தரவுகளை கொடுத்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், கண்ணன் ஒரு தனியார் பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருவதாகவும், மனோஜ்குமார் பா.ஜ.க. கட்சியின் பிரமுகர் என்றும் பொய் சொல்லி மக்களிடம் பணத்தை வசூலித்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கண்ணனையும், மனோஜ்குமாரையும் காவலாளர்கள் நேற்று கைது செய்தனர். அவர்களை காவலாளர்கள் ஈரோடு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பின்னர், சிறையில் அடைத்தனர்.