பொங்கலூர்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீதிமன்றத்தில் கையெழுத்து போட காரில் சென்ற மூவரும், அரசு பேருந்தும் மோதிக் கொண்டதில் மூவரும் பலியாயினர். பயணிகள் இலேசான காயத்துடன் தப்பித்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த சிராஜூதீன் என்பவரது மகன் நசுருதீன் (21). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சாதிக்பாட்ஷா (42) மற்றும் சாதிக் (30). இதில் நசுருதீன் மற்றும் சாதிக்பாட்ஷா ஆகியோர் தாராபுரத்தில் கறிக்கடை வைத்துள்ளனர். இவர்களுடைய கறிக்கடையில் சாதிக் வேலை செய்து வந்தார்.

இவர்கள் 3 பேரும் ஒரு வழக்கு தொடர்பாக தாராபுரம் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுபடி தினமும் திருப்பூரில் உள்ள துணை நீதிமன்றத்தில் காலை மற்றும் மாலையில் கையெழுத்து போட்டு வந்தனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலையில் திருப்பூர் வந்து நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தாராபுரம் சென்று விட்டனர்.

பின்னர் மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் கையெழுத்து போடவேண்டியது இருந்ததால் ஒரு காரில் 3 பேரும் தாராபுரத்தில் இருந்து திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம்–திருப்பூர் சாலையில் 4.30 மணியளவில் ஆண்டிபாளையம் வாய்க்கால் மேடு அருகே கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கன நொடியில் அரசு பேருந்தும், காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த மோதலில் கார் அப்பளமாய் நொறுங்கியது. இதனால் காருக்குள் இருந்த 3 பேரும் சிக்கிக் கொண்டனர். உடனே அருகில் உள்ளவர்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.

இதுகுறித்து அவினாசிபாளையம் காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்களும் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காருக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் கிரேன் கொண்டு மீட்டனர். இதில் நசுருதீன் மற்றும் சாதிக்பாட்ஷா ஆகியோர் காருக்குள்ளே இறந்து கிடந்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாதிக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சாதிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதில் அரசு பேருந்தின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. மேலும் அரசு பேருந்து, ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இலேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அவினாசி பாளையம் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடைபெற்ற இடத்தை பல்லடம் காவல் துணை சூப்பிரண்டு மனோகரன், அவினாசிபாளையம் காவல் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் பார்வையிட்டனர்.