திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த நாய், 3 மாணவர்களை கடித்து குதறியது.
திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்புவை அடுத்த சுக்காம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் வழக்கம் போல் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்து கொண்டிருந்தனர். இதில் 3–ஆம் வகுப்பில், ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பள்ளி நுழைவு வாயிலில் பூட்டப்பட்டு இருந்த கேட்டின் கீழ் பகுதி வழியாக ஒரு நாய் உள்ளே நுழைந்தது. பின்னர் திடீரென அந்த நாய் 3–ஆம் வகுப்பு அறைக்குள் புகுந்தது. வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென நாய் புகுந்ததால், மாணவ, மாணவிகள் பயத்தில் சத்தம் போட்டனர். உடனே ஆசிரியை, அந்த நாயை துரத்த முயன்றார். அதற்குள் கர்ணா (8) என்ற மாணவனை நாய் கடித்து விட்டது.
இதையடுத்து ஆசிரியையை கடிக்க முயன்ற அந்த நாய், அருகில் இருந்த 4–ஆம் வகுப்பு அறைக்குள் நுழைந்தது. அதைக் கண்டதும் மாணவர்கள் அலறியடித்து கொண்டு அங்குமிங்குமாய் ஓடினர். அப்போது மாணவர்கள் மீது பாய்ந்த அந்த நாய் மாணவி ராகவி (9), மாணவன் பகவான் (9) ஆகியோரையும் கடித்து குதறியது.
மேலும் மாணவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மற்ற ஆசிரியர்கள், பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதையடுத்து மாணவர்களை கடித்த அந்த நாயை அங்கிருந்து துரத்தினர். அதன்பின்னரே மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் நாய் கடித்ததில் காயம் அடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே பூட்டிய கேட்டுக்கு கீழே நுழைந்து வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை கடித்ததால் அந்த நாய் வெறிநாயாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை நாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
