சேலம்,

சேலம் மாவட்டத்தில், இரண்டு அடி நீள கரும்புத் துண்டுடன் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவை தலா ரூ.45 மதிப்பில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.3 கோடியே 61 இலட்சத்து 99 ஆயிரத்து 800 மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள், காவலர் குடும்ப அட்டைகள், இலங்கை தமிழர் குடும்ப அட்டைகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, வழங்கப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில் உள்ள ரே‌சன் கடையில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் அரியானூர் பழனிசாமி தலைமை வகித்தார். பன்னீர்செல்வம் எம்.பி., ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் சம்பத், தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

அப்போது ஆட்சியர் சம்பத் தெரிவித்ததாவது:

“பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பத்தினர் ஆகியோருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டுடன் தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் மொத்த 1,541 ரேசன்கடைகளும், 2 இலங்கை அகதிகள் முகாம்களும் உள்ளன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 8 இலட்சத்து 383 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 3 ஆயிரத்து 112 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 945 இலங்கைத் தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 8 இலட்சத்து 4 ஆயிரத்து 440 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இரண்டு அடி நீள கரும்புத் துண்டுடன் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவை தலா ரூ.45 மதிப்பில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.3 கோடியே 61 இலட்சத்து 99 ஆயிரத்து 800 மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம.துரைமுருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.வெங்கடாசலம், துணைப்பதிவாளர் ரத்தினவேலு மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நரசிம்மன் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.