கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே நாளில் தஞ்சம் அடைந்த 3 காதல் ஜோடிகளால் காவல் நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள தின்னூர் காட்டூரைச் சேர்ந்தவர் அரசகுமார். இவரது மகன் சக்திவேல் (23). பிளஸ்–2 படித்துள்ள இவர் ஓமன் நாட்டில் எலக்ட்ரீசியனாக முதலில் வேலை பார்த்தார். தற்போது சங்ககிரியில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (20) என்பவரும் கடந்த 3½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனந்தி டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஆனந்தி வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் திங்கள்கிழமை பாதுகாப்பு கேட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மத்தூர் அருகே உள்ள பெரமனூரைச் சேர்ந்தவர் சவிதா (25). பி.டெக் பட்டதாரி. இவரும் கௌண்டப்பாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமூர்த்தி மத்தூரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர்களின் காதலுக்கு அவர்களுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர்.

சூளகிரி அருகே உள்ள டேம் கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (29). இவர் ஓசூரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். காளிங்காவரம் அருகே உள்ள சின்னகொத்தூரைச் சேர்ந்தவர் சுமதி (22). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். கஜேந்திரனும், சுமதியும் காதலித்து வந்தனர். அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து 3 ஜோடிகளையும், மகராஜகடை, மத்தூர், சூளகிரி காவல் நிலையங்களுக்கு கூடுதல் காவல் சூப்பிரண்டு வீரராகவன் அனுப்பி வைத்தார்.

மேலும் 3 ஜோடிகளின் பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டார்.