கன்னியாகுமரி

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கன்னியாகுமரியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

`நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழ்நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கன்னியாகுமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவில், அண்ணா பேருந்து நிலையம் அருகில் முதலில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் அனில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் அண்ணாத்துரை, நாகர்கோவில் நகரச் செயலாளர் இசக்கிமுத்து உள்பட பலர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் துரைராஜ் மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

பின்னர், மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலான கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்தியன் வங்கி முன்பு சாலையில் சிறிது நேரம் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலாளர்கள், மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

இதில் மொத்தம் 29 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவரையும் காவல் வாகனங்களில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மாலையில் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்தனர்.