சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவி, 27வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது, காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு இருப்பது தெரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே கடந்த மாதம் 30ம் தேதி சென்னை வந்தார். இம்மாதம் 5ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோரும் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், தொடர் சிகிச்சையின் பயனாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டதை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்றும் பிசியோதெரபி சிகிச்சை அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டது. டாக்டர்களும் அவரது உடல்நிலையை அதிதீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 27வது நாளாக சிகிச்சை ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் அவர் பூரண குணமடைய வேண்டி அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய ஈழ தமிழர் நட்புறவு மைய தலைவர் காசி ஆனந்தன், நடிகர் ராதாரவி, அதானி குழும நிர்வாகி கரண் அதானி உள்ளிட்டோர் நேற்று அப்பல்லோ அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.

அ.தி.மு.க. மகளிரணியினர் அப்பல்லோ மருத்துவமனை முன்பு நேற்று சத்குரு சம்ஹார பூஜை நடத்தினர். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் உணவு உண்ணாமல் வேண்டுதலில் ஈடுபட்டனர். இன்னும் 2 நாட்களுக்கு இதே வேண்டுதல் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.