இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி போராடிய கல்லூரி மாணவ, மாணவிகள் 258 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ, மாணவிகள் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக நடந்துச் சென்று தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் அங்குச் சென்று கல்லூரி மாணவ, மாணவிகளை அச்சுந்தன்வயல் அருகே தடுத்து சமரசம் செய்தனர்.

காவலாளர்களின் சமரசத்தை ஏற்க மறுத்த மாணவர்கள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட போவதாக திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு காவலாளர்கள் அனுமதி மறுத்ததால் மாணவ, மாணவிகள் அந்த இடத்திலேயே அமர்ந்து சாலை மறியலில் செய்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காவலாளர்கள் 137 மாணவிகள் உள்பட 258 பேரை கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.