திருவண்ணாமலை

திருவண்ணாமலையில், மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கருப்புக் கொடி காட்டிய சல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் 25 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார். 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் போராட்டம் நடத்த காத்திருந்தனர் சல்லிக்கட்டு போராட்டக் குழுவினர்.

அதன்படி, திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா அருகே சல்லிக்கட்டுப் போராட்டக் குழுவினர் கருப்புக் கொடியுடன் நின்றிருந்தனர். அப்போது அந்தப் பக்கமாக வந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டக் குழுவினர் கருப்பு கொடி காட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்த நகர காவலாளர்கள் விரைந்து வந்து, போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் 25 பேரை கைது செய்தனர். 

பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.