மொடக்குறிச்சி,

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் ரூ.1400 கோடி சம்பளத்தை கேட்டு மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 248 பேரை காவல்துறையினர் தடாலடியாக கைது செய்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்; இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ.203–ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்த வேண்டும்; இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ரூ.1400 கோடி சம்பளத்தை உடனே வழங்கவேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயராகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் என்.நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் டி.ஜி.பழனிச்சாமி விளக்கி பேசினார். இதில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட 202 பெண் தொழிலாளர்கள் உள்பட 248 பேர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி 248 பேரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுபட்டனர்.

இதேபோல் டி.என்.பாளையம் அருகே உள்ள குத்தியாலத்தூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொருளாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் திருத்தணிகாசலம் விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 60 பேர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

குன்றி ஊராட்சியில் நடந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் 70 பெண்கள் உள்பட மொத்தம் 100 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்