கடந்த 23 ஆம் தேதி சென்னையில் வன்முறையில் ஈடுபட்டு அரசு வாகனங்கள் மற்றும் பொது சொத்திற்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளில் பெண் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 23 சென்னையில் பல்வேறு இடங்களில் மர்ம கும்பல் சிலர் கூட்டாக சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். மேலும், அவ்வழியே சென்ற அரசு பேருந்துகள், அரசு வாகனங்கள், காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியும், தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். 

அவ்வாறு, சென்னை வடபழனி, எழும்பூர், எம்.கே.பி.நகர் மற்றும் வேப்பேரி ஆகிய பகுதிகளில் கலவரம் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடபழனி காவல் நிலைய எல்லை

 வடபழனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் வாகனத்தை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்திய வழக்கு மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

 கடந்த 23 அன்று வடபழனி காவல் நிலைய ஆய்வாளரின் காவல் அரசு வாகனமான பொலீரோ வாகனத்தை சிலர் சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தினர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் வடபழனியை சேர்ந்த 1.பிரபு (32), சூளைமேட்டை சேர்ந்த 2.ரவிசாஸ்திரி (19) , எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 3.சிவா (எ) சிவகுமார் (30), வடபழனியில் வசிக்கும் 4.ராம்குமார் (26) அவரது தம்பி 5.ராஜ்குமார் (23), கைது செய்யப்பட்டனர் . 

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் சிவா (எ) சிவகுமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

மேலும், அன்றைய தினம் கலவரத்தில் ஈடுபட்டு அப்பகுதியிலுள்ள கடைகளை உடைத்தும், பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வடபழனியில் வசிக்கும் 6.விக்கி (19), 7.சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 8.சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 9.சூளைமேடு பகுதியைச் 17 வயது சிறுவன் மற்றும் 10.அரும்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

எம்.கே.பி.நகர் காவல் நிலைய எல்லை

எம்.கே.பி.நகர் காவல் நிலைய எல்லையில் தீயணைப்பு வாகனம் மற்றும் காவல் ஆய்வாளர் வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த 23 அன்று தீயணைப்புத் துறைக்கு சொந்தமான பதிவு எண் கொண்ட வாகனத்தை சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்திய வியாசர் பாடியை சேந்த 1.ஸ்டாலின் (28) 2.ராமச்சந்திரன் (25), 3.அப்துல் வாகத் (31), 4.கருணா (31), வியாசர்பாடி, எருக்கஞ்ச்சேரியை சேர்ந்த 5.சாந்தி (எ) மொட்டை சாந்தி (/52), ( பூக்கடை வைத்துள்ளார்) எருக்கஞ்சேரி ஆகிய 5 பேரும், காவல் ஆய்வாளரின் அரசு காவல் வாகனத்தை தீவைத்து கொளுத்திய வியாசர்பாடியை சேர்ந்த 6.தர்மராஜ் (30), வியாசர்பாடி 7.அகமது (21), ஆகிய 2 பேரும் என மொத்தம் 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

வேப்பேரி காவல் நிலைய எல்லை

இதே போல 23 அன்று வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 அரசு மாநகர பேருந்துகளை அடித்து சேதப்படுத்திய 2 வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஓட்டேரியை சேர்ந்த 1.பாலசந்தர் (18), பெரியமேட்டில் வசிக்கும் 2.விஜய் (18), ), 3.புரசைவாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், ஓட்டேரியை சேர்ந்த 4.நரேஷ் (28 சென்னை ஆகிய 4 குற்றவாளிகளை நேற்று வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.

இது தவிர ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய எரிப்பு உட்பட பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்ட வன்முறையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.