2016ம் ஆண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது சிறப்பு மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளிக்காமல் பணியில் இருந்த மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் மூலம் அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா இருந்த அறையின் எண் 2008. இந்த அறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு அறை என இரண்டு அறைகளில் மட்டுமே ஜெயலலிதாவுக்கு அப்பலோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர்கள், செவிலியர்களிடம் தகவல்கள் கேட்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பணியில் இருந்து மருத்துவர் ஒரு தகவலையும், பணியில் இருந்த செவிலியர் ஒரு தகவலையும் விசாரணை ஆணையத்தில் சொல்லியதாக சொல்லப்படுகிறது. அதாவது டிசம்பர் 4ந் தேதியே ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. மேலும் அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தன. இதனால் ஜெயலலிதா உயிரிழக்கும் போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக சில மருத்துவர்கள் ஆணையத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் விசாரரைண ஆணையத்தில் நேற்று ஆஜரான செவிலியர் சாமுண்டீஸ்வரி, ஜெயலலிதா உயிரிழந்ததாக கூறப்படும் டிசம்பர் 5ந் தேதி அன்று தனது அறை எண் 2008ல் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் வழக்கமான பணிக்கு  இரண்டு பணி மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள் இருந்தாக சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார். டிசம்பர் 4ந் தேதியே ஜெயலலிதாவுக்கு உடல் நிலை மோசமாகியுள்ளது. அப்படி இருக்கையில் 5ந் தேதி கூடுதல் கவனம் எடுத்து கூடுதல் மருத்துவர்கள் அன்று பணியில் இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் வழக்கமாக பணியில் இருக்கும் மருத்துவர்கள் மட்டுமே அன்றைய தினம் அனுமதிக்கப்பட்டனர்? என்று விசாரணை ஆணைய வழக்கறிஞர் செவிலியர் சாமுண்டீஸ்வரியிடம் கேட்டதாகவும் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் சாமுண்டீஸ்வரி திணறியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் டிசம்பர் 5ந் தேதி தனது இறுதிநாளன்று ஜெயலலிதா உயிருக்கு போராடியதாகவும் ஆனால் சிறப்பு மருத்துவர்கள் அழைக்கப்படாமல் அப்பலோ அலட்சியம் செய்துவிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதே சமயம் டிசம்பர் 4ந் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதால் தான் டிசம்பர் 5ந் தேதி அன்று பணிக்கு முக்கியமான மருத்துவர்கள் யாரும் வரவழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடைசி நாளில் ஜெயலலிதாவுக்கு நேர்ந்தது என்ன என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.