Asianet News TamilAsianet News Tamil

2000 ரூபாய் போதாது; 10 ஆயிரம் ரூபாய் வேண்டி பொதுமக்கள் போராட்டம்…

2000 rupees-is-not-enough-10-thousand-rupees-to-fight-f
Author
First Published Dec 15, 2016, 10:41 AM IST


கடலூர்,

கடலூரில் 2000 ரூபாய் போதாது என்றும், 10 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரியும் வங்கி அதிகாரிகளுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்தனர்.

அதன்பிறகு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க மத்திய அரசு கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

இருப்பினும் பல வங்கிகளில் பணத்தட்டுப்பாட்டால், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த அளவு பணத்தை கூட எடுக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு மூடப்பட்ட பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் இன்னமும் திறக்கவில்லை. இதனால் திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களுக்கும், வங்கிகளுக்கும் பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அதிலும் பணம் பெறமுடியவில்லை.

கடலூர் முதுநகர் பழைய காவல் நிலையம் எதிரே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலும் நேற்று பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

அப்போது வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். அருகில் உள்ள ஏ.டி.எம். மையமும் செயல்படவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தினமும் காலையில் இருந்து மாலை வரை வரிசையில் காத்து நின்றுதான் ரூ.2 ஆயிரத்தை எடுத்து செல்ல முடிகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் தந்ததால்தான் விவசாயம் மற்றும் குடும்ப செலவுகளையும் ஓரளவு சமாளிக்க முடியும், நீங்கள் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் வாங்காமல் வெளிநடப்பு செய்வோம் என்று கூறி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வங்கி மேலாளர் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் வங்கியில் உள்ள பணம் இருப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக பணம் வழங்க முடியுமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று ரூ.10 ஆயிரம் வாங்கி சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios