20 skulls bone fragments enchanted ink cans extradition in court
பெரம்பலூர்
பெரம்பலூர் மந்திரவாதியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 20 மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகள், சாமி சிலைகள், வசிய மை டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்களை காவலாளர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூரில் வீடு எடுத்து தங்கி, மகாகாளி உக்கிர பூசை நடத்த இளம்பெண் உடலை தோண்டி எடுத்து வைத்திருந்ததாக மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மந்திரவாதி கார்த்திகேயன் (31), அவரது மனைவி நசீமா (21) உள்பட ஆறு பேரை பெரம்பலூர் காவலாளர்கள் கைது செய்தனர்.
ஆவிகளுடன் பேசுதல் உள்ளிட்டவற்றுக்காக பெண்ணின் உடலை வைத்திருந்ததாகவும், பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறான வேலைகளில் கார்த்திகேயன் ஈடுபட்டதும் காவலாளர்களின் விசாரணையில் தெரிந்தது.
மேலும் கார்த்திகேயனின் வீட்டில் இருந்து மனித மண்டை ஓடுகள், வசிய மை டப்பாக்கள், சாமி சிலைகள், அரியவகை உயிரினமான கடல் குதிரைகள் உள்பட பல்வேறு பொருட்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 30 கடல் குதிரைகளை வனத்துறையினரிடம் காவலாளர்கள் ஒப்படைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் காவலாளர்கள், மந்திரவாதி கார்த்திகேயனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு நேற்றுக் கொண்டு வந்தனர்.
பின்னர், இவ்வழக்கின் ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை நீதிமன்ற பணியாளர்களிடம் காவலாளர்கள் ஒப்படைத்தனர். அவற்றை அவர்கள் சரிபார்த்தனர்.
20 மனித மண்டை ஓடுகள், பித்தளை விநாயகர் சிலை, மரத்தால் ஆன காளி சிலை, மண்டை ஓட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள், 10 வசிய மை டப்பாக்கள், 7 வசியப்பொடி டப்பாக்கள், இளம்பெண்ணின் உடலை அடைத்து வைத்திருந்த மரத்தால் ஆன சவப்பெட்டி, இளம்பெண்ணின் உடலை சுற்றி வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் கவர் துணிகள், தாமிர தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார் ஆகியவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மாந்திரீகத்திற்காக கார்த்திகேயன் பயன்படுத்திய மண்டை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை எங்கிருந்து அவர் பெற்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் காவலாளர்கள் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர்.
