ரிஜிஸ்தார் அலுவலகத்திற்கு வந்து பதிவுத் திருமணம் செய்து கொள்ள காதலனுடன் சென்ற பெண் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, காதல் திருமணத்தை சார்பதிவாளர் தடுத்து நிறுத்தினார்.திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு காதல் ஜோடி ஒன்று பதிவுத் திருமணம் செய்ய சென்றுள்ளது. மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார்.அங்கிருந்த சார்பதிவாளர் பாலச்சந்தர், காதல் ஜோடியைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.

மணப்பெண் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பரின் மகள் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். உடனடியாக அப்பெண்ணிண் பெற்றோருக்கு தகவல் அளித்த அவர், திருமணத்தை பதிவு செய்யவும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.இதை சற்றும் எதிர்பாராத மணமகனின் உறவினர்களும் நண்பர்களும், அனைத்து ஆதாரங்களும் இருந்தும், திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது ஏன்? என்று கேட்டு சார்பதிவாளருடன் சண்டை போட்டுள்ளனர்.

இதனால் பயத்து போன சார்பதிவாளர் பாலசந்தர், பாதுகாப்பு கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.இதனால் திருமணத்தை பதிய இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, 20 நிமிடத்தில் பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். தனது பெண்ணுக்கு அறிவுரை கூறி தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக வந்த காதலனோ செய்வதறியாமல் கையை பிசைந்துகொண்டு திகைத்து நின்றார். 2 வருட காதலை ஒரு போன் மூலம் பெற்றோரிடம் தெரிவித்து இருபதே நிமிடத்தில் பிரித்து வைத்த பாலசந்தரை பெற்றோர் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தனர்.