அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் வடக்கு பகுதியில் தனியார் இரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இவர்களில் ஆவடியைச் சேர்ந்த வேதமுத்து (45), மணவூரைச் சேர்ந்த முருகவேல் (35), ஒடிஸாவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் (24) ஆகிய 3 பேரும் புதன்கிழமை இரவு பணியில் இருந்தனர்.
அப்போது, பொட்டாசியம் சிலிகான் என்னும் வேதிப்பொருள் செல்லும் குழாயின் அடைப்பானை திறந்தபோது அழுத்தம் தாங்காமல் குழாய் வெடித்துச் சிதறியது. இதில், வேதமுத்து உள்ளிட்ட மூன்று பேர் மீதும் தீ பரவியது.
தகவலின்பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில், முருகவேலும், ரஞ்சன் குமாரும் வியாழக்கிழமை காலை உயிரிழந்தனர். வேதமுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலையின் உரிமையாளர் இலட்சுமண ராவ் (66), மேலாளர் ரமேஷ் (44) ஆகியோரைக் கைது செய்தனர்.
அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
