காட்பாடி அருகே சிக்னல் இயந்திரத்தை சேதப்படுத்தி இரண்டு இரயில்களை நிறுத்தி, நான்கு பெண்களிடம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 13 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்தை இரயில்வே பாதுகாப்புப் படையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைசூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த காவிரி விரைவு இரயில் மற்றும் கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த நீலகிரி விரைவு இரயில் ஆகய இரண்டு இரயில்களிம் காட்பாடி அருகேயுள்ள சிக்னல் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அடுத்தடுத்து கடந்து சென்றன.
இரு இரயில்களும் சிக்னலில் நின்றிருந்தபோது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் முகமூடி அணிந்து கத்தியுடன் 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் நுழைந்தது.
பெண்கள் 4 பேரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 13 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு இரயில்களில் இருந்து இறங்கி தப்பினர். தங்க நகைகளை பறிகொடுத்த பெண்கள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் சென்றதும் அங்கிருந்த காவலாளரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி புகார் அளித்தனர்.
இதையடுத்து இரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையர் அஷ்ரப், உதவி ஆணையர் சாய்பிரசாத், காட்பாடி இரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
அப்போது, இரயில்கள் நின்றுச் சென்ற இடத்திலிருந்த சிக்னல் இயந்திரம் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து முகமூடி கொள்ளையர்கள், சிக்னல் இயந்திரத்தை சேதப்படுத்தி இரயில்களை நிறுத்தச் செய்து பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்றனரா என்பது குறித்தும் காட்பாடி இரயில்வே காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து காட்பாடி வந்த இரயில்வே எஸ்.பி.விஜயகுமார், சம்பவம் நடந்த பகுதியை வியாழக்கிழமை பார்வையிட்டு காவலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
