நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் இல்லாததால் சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்த பரிதாபம் வேலூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில், வைஷ்ணவி என்ற சிறுமி காய்ச்சல் காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஊசி மட்டும் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த வைஷ்ணவி இன்று உயிரிழந்தார்.

இதனால், வைஷ்ணவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் அடிப்படை வசதி கோரியும், டாக்டர்கள் இருந்திருந்தால் தங்கள் பிள்ளை உயிரிழந்திருக்க மாட்டாள் என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்

இதேபோல், ராஜ்குமார் என்பவர் கார் விபத்தில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் ராஜ்குமாரும் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து, சிறுமி வைஷ்ணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது