50 அடி உயரம்... கொள்ளிட பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்த கார்.! கேரள தம்பதி துடிதுடித்து பலி
திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் மேம்பாலத்தின் தடுப்பு சுவற்றை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்த காரில் பயணம் செய்த கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடக்க மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு கார் ஒன்று ஆற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இதில் காரில் பயணம் செய்த கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
முதலில் காரில் பயணம் செய்தது யார் என்ற தெரியாத நிலை இருந்தது. கேரளா வாகன பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் தனது மனைவியுடன் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது தெரியவத்தது.
கேரள தம்பதி துடி துடித்து பலி
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் வலது பக்க தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாமல் மண் மட்டுமே இருந்ததால் கார் உடைந்து சிதறியது. மேலும் காரில் பயணித்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கணவன் மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேதம் அடைந்த காரை கிரேன் மூலம் ஆற்றில் இருந்து மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்