2 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!
திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பசலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி செல்லம்மாள்(28). இவர்களுக்கு பொன்னர் (5), பெரியக்காள் (2) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்கள் சமரசம் செய்தும் சண்டை ஓய்ந்தபாடில்லை. இதேபோல் மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் செல்லம்மாள் கடும் மனஉளச்சலில் இருந்து வந்தார். செல்லம்மாள் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார். பின்னர் தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் வாழ்க்கை கேள்விகுறியாகிடும் என கருதி அவர்களையும் கொன்று விட தீர்மானித்தார்.
செல்லம்மாள், சனிக்கிழமை கணவர் வெளியே சென்ற பின் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, செல்லம்மாளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சத்தம் கேட்டு கிணற்றை நோக்கி ஓடிச் சென்றனர். அப்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த செல்லம்மாளையும் அவரது இரு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர்.
கஜா புயல் காரணமாக சிறுமலை பகுதியில் சாலை சேதமடைந்துள்ளதால், 4 கி.மீ. தொலைவுக்கு குழந்தைகளின் சடலத்தையும், ஆபத்தான நிலையில் செல்லம்மாளையும் தோளில் சுமந்து தூக்கி வந்தனர். பின்னர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செல்லம்மாள் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.