இந்து கடவுள்கள் மற்றும் கோயில்கள் குறித்து அவதூறாக பேசிய, கிறிஸ்தவ போதகர் மோகன் சி.லாசரஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியைச் சேர்ந்தவர் பிரபல கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ். இவர் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்து வருகிறார். 

இவர் கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ காட்சி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. அந்த விடியோவில், மோகன் சி.லாசரஸ், இந்து மதத்தைப் பற்றியும், இந்து கோயில்கள் பற்றியும் அவதூறாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவர் மீது புகார் கூறப்பட்டது. 

இந்த நிலையில், மோகன் சி.லாசரஸ், இந்து மதத்தையோ, தெய்வங்களையோ இழிவுபடுத்தி பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மோகன் சி.லாசரஸ் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.