18 MLAs Disqualification Case Postponed

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

முதலமைச்சர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 4 ஆம் தேதி விசாரிக்கப்பட்டது. நீதிபதி ரவிச்சர்ந்திர பாபு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, தகுதி நீக்கம் தொடர்பாக எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை. அது தொடர்பான உத்தரவையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவிக்கவில்லை. அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே, தபால் மூலம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. கட்சி சாராமல் செயல்பட வேண்டிய சபாநாயகர், முதலைமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட்டுள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்ததாலேயே, எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ததாக சபாநாயகர் தனபால் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்த மனு தாக்கல் செய்து வருவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நவம்பர் 2 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் நவம்பர் 2 ஆம் தேதி வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் என கூறப்படுகிறது.